பரமேஸ்வரா – PARAMESWARA


15/2/18

பரமேஸ்வரா – மூலச் சான்றுகள்
============================
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
(தமிழ் மலர் – 15.02.2018)

பரமேஸ்வராவைப் பற்றி நான்கு மூலச் சான்றுகள் உள்ளன.

1. போர்த்துகீசிய வரலாற்று ஆசிரியர் கோர்டின்ஹோ ஏரடியா
(Gordinho D’Eredia)

2. போர்த்துகீசிய வரலாற்று ஆசிரியர் டோம் பைர்ஸ்
(Tome Pires)

3. சீனாவின் மிங் வம்சாவளி வரலாற்றுக் கோப்புகள்
(Chinese Ming Dynasty)

4. மலாய் காலச்சுவடுகள்
(Sejarah Melayu)

கோர்டின்ஹோ ஏரடியா என்பவர் 1600-ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த போர்த்துகீசிய வரலாற்று ஆசிரியர். மலாக்காவில் பிறந்தவர். இவருடைய காலம் 16 ஜூலை 1563 – 1623. இயற்பெயர் இமானுவேல் கோர்டின்ஹோ டி ஏரடியா (Emanuel Godinho de Erédia).

இவரின் தந்தையார் ஒரு கப்பல் மாலுமி. பெயர் Joao de Erédia Aquaviva. தாயார் இந்தோனேசியா சுலவாசி தீவின் இளவரசியார். பெயர் டோனா எலினா வெசிவா (Dona Elena Vessiva).

இவர் எட்டு வரலாற்று நூல்களை எழுதி இருக்கிறார். அவற்றில் இரு நூல்கள் மலாக்கா வரலாற்றைச் சித்தரிக்கின்றன.

1. Report on the Golden Chersonese, or Peninsula, and Auriferous, Carbuncular and Aromatic Islands (a broad account of the Malay Archipelago) – 1597-1600

2. Description of Malaca, Meridional India, and Cathay (Declaracam de Malaca e da India Meridional com Cathay) – 1613

இந்த இரு நூல்களிலும் 1613-ஆம் ஆண்டு அவர் எழுதிய ஒரு நூல். Description of Malaca, Meridional India, and Cathay அந்த நூல் தான் பரமேஸ்வரா எனும் பெயருக்கு வலு சேர்க்கிறது.

பரமேஸ்வராவைப் பரமேஸ்வரா என்று தான் சொல்கிறார். அதே சமயத்தில் மலாக்காவை ஆட்சி செய்தவர் பரமேஸ்வரா என்றும் குறிப்பிடுகிறார். இஸ்கந்தர் ஷா (Iskandar Shah) என்று குறிப்பிடல்லை. அந்த நூலில் அவர் பரமேஸ்வராவை பெர்மிசுரி (Permicuri) என்றும் பெயரிட்டு அழைக்கிறார்.

(சான்று: Jorge Flores (29 September 2015). “Chapter 12”. In Miriam Eliav-Feldon, Tamar Herzig. Dissimulation and Deceit in Early Modern Europe. Palgrave Macmillan. p. 188. ISBN 9781137447494.)

அடுத்து வருபவர் டோம் பைர்ஸ் (Tome Pires). 1511-ஆம் ஆண்டில் மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைபற்றினார்கள். 1513-ஆம் ஆண்டு டோம் பைர்ஸ் மலாக்காவிற்கு வந்தார். சில ஆண்டுகள் தங்கினார்.

இவர் ஒரு வரலாற்று நூல் எழுதினார். பரமேஸ்வரா இறந்து ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட நூல். அந்த நூலின் பெயர் சுமா ஓரியண்டல் (Suma Oriental). அந்த நூலில் மலாக்காவின் தொடக்க கால வரலாற்றைப் பற்றி அவரின் பார்வையில் வேறு விதமாகப் பதிவு செய்து உள்ளார்.

பரமேஸ்வராவை பரமிசுரா என்றும் பரிமிசுரா (Paramicura or Parimicura) என்றும் சொல்கிறார்.

அவர் சொல்கிறார்: பரமேஸ்வராவிற்குப் பின்னர் அவருடைய மகன் அரியணை ஏறினர். அவரின் பெயர் செக்கும் டாஷா (Xaquem Darxa). இவர் தன்னுடைய 72-ஆவது வயதில் மதம் மாறினார்; 90 வயதில் இறந்து இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

அடுத்து வருவது சீனாவின் மிங் வம்சாவளி வரலாற்றுக் கோப்புகள் (Chinese Ming Dynasty). இந்த வரலாற்றுக் கோப்புகளில் 1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரையிலான சீன நாட்டு வரலாற்றுச் சுவடுகளைக் காணலாம்.

மலாக்கா ஆட்சியாளர்களும் மலாக்கா தூதர்களும் சீனாவில் உள்ள நான்கிங் (Nanking) நகரத்திற்குப் பயணம் செய்த தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அந்தக் கோப்புகளில் காணப்படும் சொற்கள்:
=======================================

1. பாய்-லி-மி-சு-லா (Pai-li-mi-su-la in) – 1405

2. அவரின் மகன் மு-கன்-ச-யு-தி-ர்-ஷா (Mu-kan-sa-yu-ti-er-sha) – 1414

3. அவரின் பேரன் சி-லி-மா-ஹா-லா-சே (Hsi-li-ma-ha-la-che) – 1424

அந்தச் சொற்களின் விளக்கம்:
===========================

1. பாய்-லி-மி-சு-லா என்றால் பரமேஸ்வரா (Parameswara)

2. மு-கன்-ச-யு-தி-ர்-ஷா என்றால் மெகாட் இஷ்கந்தார் ஷா (Megat Iskandar Shah)

3. சி-லி-மா-ஹா-லா-சே என்றால் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja)

மாமன்னர் யோங் லே (Yong-lo Emperor) அவர்களைச் சந்திக்க மலாக்கா ஆட்சியாளர் சென்றதற்குக் காரணங்கள் உள்ளன. முதல் காரணம் வணிக நட்புறவு. இரண்டாவது காரணம் பாதுகாப்பு.

அந்தக் காலக் கட்டத்தில் சயாமியர்களும் இந்தோனேசிய சிற்றரசுகளும் மலாக்காவைத் தாக்குவதற்கு காத்துக் கொண்டு இருந்தன. தாக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருந்தன.

அந்தக் காரணங்களினால் தான் மலாக்கா ஆட்சியாளர்களின் சீனப் பயணங்கள் அமைந்தன. இந்த இரண்டும் தான் முக்கியமான காரணங்கள்.

1414-ஆம் ஆண்டு பரமேஸ்வராவின் மகன் மெகாட் இஷ்கந்தார் ஷா சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டார். தன் தந்தையார் பரமேஸ்வரா இறந்து விட்டதாக மாமன்னர் யோங் லே அவர்களிடம் சொல்லி இருக்கிறார்.

அடுத்து 1424-ஆம் ஆண்டு பரமேஸ்வராவின் பேரன் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். தன் தந்தையார் மெகாட் இஷ்கந்தார் ஷா இறந்து விட்டதாக சொல்லி இருக்கிறார். இந்தப் பயணங்கள் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை வளர்க்கும் பயணங்களாக அமைந்து உள்ளன.

இந்த இரு பயணங்களின் போதும் சீனக் கடற்படை தளபதி செங் ஹோ (Admiral Zheng He’s – Cheng Ho) துணையாகச் சென்று இருக்கிறார். ஒரு கடற்படையே மலாக்காவில் இருந்து சீனாவிற்குப் போய் இருக்கிறது.

(சான்று: Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: an open access resource, Asia Research Institute and the Singapore E-Press, National University of Singapore, Wade 2005, p. 776, retrieved 14 November 2017)

இந்தப் பதிவுகளில் இருந்து ஒன்றை மட்டும் நாம் உறுதியாகச் சொல்ல முடியும். அதாவது பரமேஸ்வரா மதம் மாறவில்லை எனும் ஓர் உண்மை. பரமேஸ்வரா இறக்கும் போது ஓர் இந்துவாக இறந்து இருக்க வேண்டும். அல்லது ஓர் இந்தியராக இறந்து இருக்க வேண்டும். வெள்ளிடைமலை.

பரமேஸ்வராவின் பேரன் ஸ்ரீ மகாராஜா தான் மதம் மாறி இருக்கிறார். மதம் மாறிய பின்னர் தன் பெயரை முகமது ஷா (Sultan Muhammad Shah) என்று மாற்றிக் கொண்டு இருக்கிறார்.

வரலாற்று ஆசிரியர் டோம் பைர்ஸ் குறிப்பிடும் மொடர்வஷா (Modarfaxa) என்பவர் சுல்தான் முகமது ஷாவாகத் தான் இருக்க முடியும். இந்த மதம் மாற்ற நிகழ்வு 1435-ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடந்து இருக்க வேண்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதி வரும் பரமேஸ்வரா ஆய்வு நூலில் இருந்து தொகுக்கப் பட்டது)


பரமேஸ்வராவின் மத மாற்றம்
===========================

மலாக்கா மன்னர்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சி காலங்களையும் தெரிந்து கொள்வோம்.

• பரமேஸ்வரா 1400–1414
• மெகாட் இஷ்கந்தார் ஷா 1414–1424
• முகமது ஷா 1424–1444
• அபு ஷாகித் 1444–1446
• முஷபர் ஷா 1446–1459
• மன்சூர் ஷா 1459–1477
• அலாவுடின் ரியாட் ஷா 1477–1488
• முகமது ஷா 1488–1511
• அகமட் ஷா 1511–1513

பரமேஸ்வராவின் மத மாற்றம் இந்த நாள் வரையில் ஒரு தெளிவற்ற நிலையில் இருந்து வருகிறது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் பரமேஸ்வரா மதமாற்றம் செய்தார் என்று Malay Annals எனும் மலாய் காலச்சுவடுகள் சொல்கின்றன.

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் மெகாட் இஷ்கந்தார் ஷா 1414-இல் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். சரியான தேதி விவரங்களும் நம்மிடம் உள்ளன. அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414.

தன்னுடைய தந்தையாரைப் பரமேஸ்வரா என்று அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.
(சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781.)

பரமேஸ்வரா இறந்த அதே ஆண்டு இறுதி வாக்கில் அவருடைய மகன் மெகாட் இஷ்கந்தார் ஷா மறுபடியும் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அதையும் உறுதி படுத்துகிறேன்.

மேலே சொல்லப் பட்டது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து மீட்கப் பட்டச் சான்றுகள். அந்த இணைய முகவரியில் மேலும் தகவல்கள் உள்ளன. நீங்களும் போய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

உள்நாட்டு வரலாற்றுப் பாடநூல் ஆசிரியர்கள் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மிகவும் கவனமாகக் கையாள வேண்டி உள்ளது.

பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சிப் செய்த காலத்தில் அவரைப் பலமேசுலா என்றே சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். அழைத்தும் வந்தார்கள். இப்போதும்கூட மலேசியச் சீனர்கள் பலேமிசுலா… பலேமிசுலா… (Bai-li-mi-su-la) என்றுதான் அழைக்கிறார்கள்.

நமக்கும் வாய் தவறி வந்து விடுகிறது. சரி விடுங்கள். பரமேஸ்வராவைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. பலமேசுலா என்றுதான் அழைத்து இருக்கிறார்கள். (சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1487 – 1489)

இந்திய நாட்டவர்கள் பரம ஈஸ்வரா அழைத்து இருக்கிறார்கள். அராபிய நாட்டு வணிகர்கள் பரமோ ஈஸ்வரா என்று அழைத்து இருக்கிறார்கள். பின்னர் வந்த சீன வணிகர்கள் பலமோஸ் லா என்று அழைத்து இருக்கிறார்கள். ரகரம் ஒரு லகரமாக மாறிப் போவதையும் கவனியுங்கள். இங்கே தான் சரித்திரம் அழகாகப் பாரிய வீணை வாசிக்கின்றது.

மறுபடியும் சீன நாட்டின் மிங் அரச குறிப்பேடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். மலாக்கா நாட்டின் அரசர் பலேமிசுலா (Bai-li-mi-su-la, the king of the country of Melaka) என்றுதான் சீனப் பழஞ்சுவடிகள் சொல்கின்றன.

(Ming Shilu – also known as the Veritable Records of the Ming dynasty, has a comprehensive 150 records or more on Parameswara (Bai-li-mi-su-la) and Malacca.)

ஆக மலாக்கா வரலாற்றின் கதாநாயகன் பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா.

இன்னும் ஒரு விசயம். பரமேஸ்வராவின் மனைவியைப் பரமேஸ்வரி என்று தான் சீனாவின் மிங் அரசர் யோங் லே (Yong-lo Emperor) அழைத்து இருக்கிறார். அதாவது சீன மொழியின் பேச்சு வழக்கில் பர்மிசுலி (Ba-er-mi-su-li).

அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டிய இன்னும் ஒரு விசயம். அதாவது யோங் லே அரசர் சீனாவை 1402-ஆம் ஆண்டில் இருந்து 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார் எனும் விசயம்.

(1402-ஆம் ஆண்டில் இருந்து 1414-ஆம் ஆண்டு) இந்தக் காலக் கட்டத்தில் தான் மலாக்காவின் வாணிகம் வளர்ச்சி பெற்று வந்த காலக் கட்டம். இந்தக் கால இடுக்குகளில் தான் பரமேஸ்வரா கடல் பயணம் செய்து இருக்கிறார். அதாவது சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார்.

ஆக சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். பரமேஸ்வரா என்பவர் வாழும் காலத்தில் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் வாழ்ந்து இருக்கிறார். இறக்கும் காலத்திலும் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்தும் போய் இருக்கிறார்.

அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். எங்கே இருந்து சுல்கார்னாயின் என்பவர் வந்தார். எப்படி பரமேஸ்வராவின் பெயர் வசதிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப் பட்டது. உங்களுக்கே குழப்பம் ஏற்பட்டு இருக்கும்.

ஆக வரலாற்றுச் சித்தர்கள் எப்படி எல்லாம் வரலாற்றுச் சித்துகளைக் காட்டி வருகிறார்கள் பாருங்கள். போதுங்களா. எங்கே வருகிறேன்… அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் இப்போது இருந்தே பரமேஸ்வரா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை முன் எடுத்து வைக்க வேண்டும். இல்லை என்றால் பரமேஸ்வரா எனும் பெயரே வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டு விடும்.

அதனால் தான் வலுவான சான்றுகளுடன் பரமேஸ்வராவின் சரிதையை ஓர் ஆய்வு நூலாக எழுதி வருகிறேன்.

 


06/02/2018

பரமேஸ்வராவின் பின்புலம்
==========================
தமிழ் மலர் 06.02.2018

பரமேஸ்வரா எங்கு இருந்து வந்தார் என்பதற்கான வேர்களை ஆராய்ந்து கொண்டு வருகிறோம். அதனால் தான் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர் அரசுகளின் வரலாற்றையும் முன்வைக்க வேண்டியுள்ளது. அப்போது தான் பரமேஸ்வராவின் பின்புலம் மிகச் சரியாகத் தெரிய வரும்.

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர் அரசுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஓர் அரசு ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya) ஆகும். இந்தோனேசியாவை 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மாபெரும் அரசு. இந்தப் பேரரசைப் பற்றித் தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

அதன் பின்னர்தான் பரமேஸ்வராவின் வரலாறு தெரிய வரும். தொடர்ந்து படியுங்கள்.

ஸ்ரீ விஜய என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். ஸ்ரீ (Sri) என்றால் நற்பேறு; வளம் மிக்க; மகிழ்ச்சி. விஜய (Vijaya) என்றால் வெற்றி அல்லது மிகச்சிறந்த என்று பொருள். மற்ற மொழிகளில்: (இந்தோனேசிய மலாய்: Sriwijaya; தாய்லாந்து மொழி: Siwichai, சமஸ்கிருதம்: Śrīvijaya; கெமர் மொழி: Srey Vichey; சீனமொழி: Shih-li-fo-shih; San-fo-chi). (1. Coedes, George. Walter F. Vella)

ஸ்ரீ விஜய பேரரசு இந்தோனேசியாவின் சுமத்திரா தீவை மையம் கொண்ட ஒரு பேரரசு. இந்த ஸ்ரீ விஜய பேரரசு 8-ஆம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டு வரை புத்த மதத்திற்குச் சிறப்பு அங்கீகாரம் வழங்கியது. 7-ஆம் நூற்றாண்டில் ஆயிரக் கணக்கான இந்திய வணிகர்கள் சுமத்திராவிற்கு வந்தனர். வணிகம் பெருகியது. இந்து மதமும் புத்த மதமும் செழித்தோங்கின.

10-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய பேரரசின் வழித்தோன்றல்களாகச் சைலேந்திரா (Sailendra), மத்தாராம் (Mataram) அரசுகள் உருவாகின. இந்த இரு அரசுகளுமே ஜாவா தீவில் மையம் கொண்டவை. சைலேந்திரா அரசு போரோபுடூர் (Borobudur) புத்த ஆலயங்களைக் கட்டி அழகு பார்த்தது. மத்தாராம் அரசு பிராம்பனான் (Prambanan) திருமூர்த்தி கோயிலைக் கட்டி அழகு பார்த்தது.

உலகத்திலேயே மிக அழகான இந்துக் கோயில் எது தெரியுமா? அதுதான் பிராம்பனான் திருமூர்த்தி கோயில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒன்றிணைத்து திருமூர்த்திகள் என்கிறோம்.

இந்தக் கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்தக் கோயிலின் 30 சதுர கி.மீ. அளவிற்கு உள்ள நிலப்பகுதியை இந்தோனேசியக் காப்பகமாக இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்து உள்ளது.

இந்தக் கோயிலை காலின் மெக்கன்சி (Colin Mackenzie) எனும் ஆங்கிலேயர் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். அது தவறு. அதைக் கண்டுபிடித்தது ஒரு பிரெஞ்சுக்காரர்.

13-ஆம் நூற்றாண்டில் சுமத்திராவில் மஜாபாகித் அரசு உருவானது. காஜா மாடா (Gajah Mada) எனும் அரசரின் கீழ் உச்சத்தைத் தொட்டது.

ஸ்ரீ விஜய பேரரசின் வணிகத்துறை சீனா, இந்தியா, வங்காளம், மத்திய கிழக்கு நாடுகள் வரை பெருகி இருந்தது. சீனாவின் தாங் வம்சாவளியில் இருந்து சோங் வம்சாவளி வரை நீடித்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசு உலக வரலாற்றில் இருந்து மறைந்து போனது.

அதாவது நீல உத்தமன் காலத்தில் இருந்து மறைந்து போனது. சிங்காசாரி (Singasari), மஜாபாகித் (Majapahit) அரசுகளின் விரிவாக்கத்தினால் அந்த மறைவு ஏற்பட்டது என்று சொன்னால் சரியாக இருக்கும்.

பரமேஸ்வராவின் பின்புலம் – 2
==========================
தமிழ் மலர் 07.02.2018

மலாக்காவைத் தோற்றுவித்தவர் யார்? பரமேஸ்வரா என்பவரா? ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா? சுல்கார்னாயின் ஷா என்பவரா?
மகா அலெக்ஸாண்டர் என்பவரா?

உள்நாட்டு வரலாற்றில் இந்தச் சர்ச்சை ஒரு சின்னத் திரைக் காவியம் போல அரங்கேற்றம் கண்டு வருகிறது. அன்றும் சரி இன்றும் சரி அந்தச் சர்ச்சை ஒரு தொடர் நெடும் காவியமாய் நெளிந்து நீண்டு போகின்றது.

பரமேஸ்வரா எனும் சொல் ஒரு தமிழ்ச் சொற்றொடர். பரமா (Parama) எனும் சொல்லும் ஈஸ்வரா (Ishvara) எனும் சொல்லும் இணைந்து உருவானதே பரமேஸ்வரா (Parameswara) எனும் சொல் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈஸ்வரன். (1.Tsang, Susan; Perera, Audrey)

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைப் பார்த்து விடுவோம்.

* 1375-ஆம் ஆண்டில் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja) என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தார். இவர் சிங்கப்பூரை 1389-ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்த ஸ்ரீ மகாராஜாவிற்கு மகனாகப் பிறந்தவர் தான் பரமேஸ்வரா.

* 1389-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சிற்றரசில் அரசியல் குழப்பங்கள். அதனால் ஸ்ரீ மகாராஜாவின் பொறுப்புகளை அவருடைய மகனான ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா ஏற்றுக் கொண்டு அரியணை ஏறினார். ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா 1389-ஆம் ஆண்டில் இருந்து 1399-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்து வந்தார். (2.Windstedt, Richard Olaf)

* 1399-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

* 1401-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவித்தார்.

* 1405-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்றார். மிங் அரசரின் நட்புறவைப் பாராட்டி அவரின் ஆதரவைப் பெற்றார்.

* 1409-ஆம் ஆண்டில் இந்தோனேசியா சுமத்திராவில் இருந்த பாசாய் எனும் சிற்றரசின் இளவரசியைப் பரமேஸ்வரா திருமணம் செய்து கொண்டார்.

* 1411-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சீனாவிற்கு மறுபடியும் சென்றார். மிங் அரசரின் பாதுகாப்பை நாடினார்.

* 1414-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70-ஆவது வயதில் காலமானார். (3.Miksic, John N.)

பரமேஸ்வரா சிங்கப்பூருக்கு எப்படி வந்தார். இவருடைய பாட்டனார் முப்பாட்டனார்கள் சிங்கப்பூருக்கு ஏன் வந்தார்கள். எப்படி வந்தார்கள். ஒரு காலக் கட்டத்தில் சுமத்திரா தீவை ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்தது.

அந்தப் பேரரசின் கீழ் பலேம்பாங் சிற்றரசு இயங்கியது. அந்தச் சிற்றரசின் அரசராக பரமேஸ்வராவின் முப்பாட்டனார் நீல உத்தமன் இருந்தார். அவர் சிங்கப்பூருக்கு ஏன் வந்தார். இவற்றை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்திய அரச பரம்பரையினர் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பரமேஸ்வராவின் உண்மையான வரலாற்றுப் பின்னணி தெளிவாகத் தெரிய வரும்.

அந்த வகையில் அடுத்த அத்தியாயத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவை ஆட்சி செய்த வர்மதேவா பேரரசைப் பற்றி தெரிந்து கொள்வோம்

இந்தோனேசியாவில் பற்பல காலக் கட்டங்களில் பற்பல பேரரசுகள் ஆட்சிகள் செய்து உள்ளன. பெரும்பாலானவை இந்தியர் பேரரசுகள். இந்தோனேசிய வரலாற்றின் தொடக்க காலக் கட்டங்களில் இந்தியர் பேரரசுகள் தான் மிகையான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன.

இந்தியப் பேரரசுகள் என்றால் இந்தியாவின் பேரரசுகள். அதாவது இந்தியா எனும் நாட்டின் கீழ் இருந்த பேரரசுகளைக் குறிக்கும்.

இந்தியர் பேரரசுகள் என்றால் கடல் கடந்து வந்த இந்தியர்கள் ஆட்சி செய்த பேரரசுகளைக் குறிக்கும். இந்தியப் பேரரசுகள் என்பதிலும் இந்தியர் பேரரசுகள் என்பதிலும் வேறுபாடுகள் உள்ளன.

இந்தோனேசியாவில் இருந்த பேரரசுகளை இந்தியர் பேரரசுகள் என்றே அழைக்க வேண்டும்.

இந்தோனேசியா முழுமைக்கும் ஆங்காங்கே சின்னச் சின்ன அரசுகளும் இருந்தன. அவை உள்ளூர் மக்களால் உருவாக்கப் பட்ட அரசுகள். பின்னர் காலத்தில் பெரும் அரசுகள் வளர்ச்சி பெற்று கோலோச்சின.

சின்ன அரசுகளால் அந்தப் பெரிய அரசுகளை எதிர்த்து நின்று போராட முடியவில்லை. வலிமை மிகுந்த அந்த அரசுகளை எதிர்த்து நின்று சமாளிக்கவும் முடியவில்லை. கால ஓட்டத்தில் அந்தச் சின்ன அரசுகள் கரைந்து போயின.

(கூடுதல் தகவல்களுக்கு இன்றைய 07.02.2018 தமிழ் மலர்)

 

பரமேஸ்வராவின் பின்புலம் – 3
============================
தமிழ் மலர் 09.02.2018

மாப்பு சிந்தோக் காலத்தில் தான் ஜாவா தீவில் இருக்கும் மெராப்பி (Merapi) எரிமலை வெடித்தது. உயிர்ச் சேதங்களும் பொருட் சேதங்களும் அதிகம் ஏற்பட்டன. (6.Spuler, Bertold; F.R.C Bagley).

விக்ரமதாம துங்கா தேவாவிற்குப் பின்னர் அவருடைய மகள் இசானாதுங்க விஜயா (Isanatungavijaya) என்பவர் ஆட்சிக்கு வந்தார். (F1.The Isyana Dynasty)

மெராப்பி எரிமலை வெடித்துச் சேதங்களை ஏற்படுத்தியதும் மத்தாரம் பேரரசு தன் நிர்வாகத் தலைநரைக் கிழக்கு ஜாவாவிற்கு மாற்றியது. மேற்கு ஜாவாவில் ஜொம்பாங் எனும் ஒரு மாவட்டம் (Jombang Regency) இருந்தது. இப்போதும் இருக்கிறது.

இந்த மாவட்டத்தில் பிராந்தாஸ் ஆறு (Brantas River) சிறப்புமிக்கது. இந்த ஆற்றின் இருமருங்கிலும் தான் அப்போதைய புதிய மத்தாரம் பேரரசு அமைக்கப் பட்டது.

அந்தப் புதிய மத்தாரம் பேரரசிற்கு மேடாங் (Medang) அரசு என்று பெயர் வைக்கப்பட்டது. இருப்பினும் மேடாங் எனும் சொல்லை விட மத்தாரம் எனும் சொல்லே நிலைத்து விட்டது. இந்தோனேசிய வரலாற்றில் மத்தாரம் எனும் சொல்லே நிலையான அடைமொழியாகவும் வலம் வருகிறது.

இந்த விக்ரமதாம துங்கா தேவா தான் பின்னர் காலத்தில் இசாயனா எனும் அரச பரம்பரையை உருவாக்கினார். பழைய மத்தாரம் பேரரசில் இவர் சஞ்சாயா அரச பரம்பரையைச் சார்ந்தவர். புதிய அரசு உருவானதும் தன்னுடைய அரசப் பரம்பரைப் பெயரை இசாயனா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இவரின் சந்ததியினரை இசாயனா பரம்பரையினர் (Isayana Dynasty) என்று சொல்வதும் உண்டு.

மத்தாரம் பேரரசு தன் நிர்வாகத் தலைநரைக் கிழக்கு ஜாவாவிற்கு மாற்றியதற்கு மூன்று காரணங்கள் சொல்லப் படுகின்றன.

முதல் காரணம்: மெராப்பி எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள். அதனால் ஏற்பட்ட எரிமலைப் புகை மண்டலத்தின் நச்சுக் காற்றுகள்;

இரண்டாவது காரணம்: அரச அதிகாரப் போராட்டம்.

மூன்றாவது காரணம்: சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு ஜாவாவில் இருந்த மத்தாரம் பேரரசின் மீது தாக்குதல் நடத்தியது.

அந்த நிர்வாக மாற்றத்தில் சஞ்சாயா (Sanjaya) எனும் மற்றொரு சிற்றரசும் ஜாவாவில் உருவானது. ஓர் இடைச் செருகல். சஞ்சாயா எனும் பெயரில் இரு அரசுகள் இருந்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று சஞ்சாயா சிற்றரசு. மற்றொன்று சஞ்சாயா பேரரசு. (7.Willard A. Hanna)

கிழக்கு ஜாவாவிற்கு மாறிய சஞ்சாயா பேரரசு அப்படியே தன் அதிகார வலிமையைப் பாலி தீவிலும் களம் இறக்கியது. அந்த வகையில் தான் பாலி தீவில் முதன்முதலாக ஓர் இந்திய சாம்ராஜ்யம் உருவானது. இந்து சமயம் அங்கே நிலைத்துப் போனது.

அதனால் பாலி தீவு மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றத் தொடங்கினர். இப்போது பாலி தீவில் வாழ்பவர்களில் 83 புள்ளி 5 விழுக்காட்டினர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ஆகும்.

கி.பி. 989-ஆம் ஆண்டு பாலி தீவை உதயனா வர்மதேவா (Udayana Warmadewa) எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். அப்போது பாலி தீவின் அரச மொழியாக ஜாவா மொழி இருந்தது. ஜாவா தீவின் கிழக்கே பாலி தீவு இருக்கிறது.

அந்தக் காலக் கட்டத்தில் ஜாவாவை மத்தாரம் அரச வம்சத்தினர் (Medang Mataram Kingdom) ஆட்சி செய்து வந்தனர். அரசராக தர்மவம்சன் (Dharmawangsa) என்பவர் இருந்தார். (F2. Dharmawangsa) இவருக்கு ஒரு தங்கை. இளவரசி குணப்பிரியா தர்மபத்தினி (Guna Priya Dharmapatni). (8.Cœdès, George)

இவர் கிழக்கு ஜாவாவில் இருந்த வத்துகாலோ அரண்மனையில் (Watugaluh Palace, East Java) கி.பி.961-ஆம் ஆண்டு பிறந்தவர். மத்தாரம் பேரரசை ஆட்சி செய்த அரசர் தர்மவம்சன்; மத்தாரம் பேரரசின் இளவரசி குணப்பிரியா தர்மபத்தினி; ஆகிய இருவரின் தந்தையார் பெயர் ஸ்ரீ மகுட வம்சவத்தனா (Sri Makutawangsawarddhana). (F3. The Medang or Mataram Kingdom)

 

பரமேஸ்வராவின் பின்புலம் – 4
============================
தமிழ் மலர் 10.02.2018

நீல உத்தமனின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா திரிபுவனா (Sri Maharaja Parameswara Tribuwana). கி.பி.1324-ஆம் ஆண்டில் இருந்து 1372-ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய அரசின் அரசராகப் பலேம்பாங்கை ஆட்சி செய்து வந்தார்.

இவருக்கு முன்னர் பலேம்பாங்கை நீல உத்தமனின் தந்தையார் ஆட்சி செய்து வந்தார். அவருடைய பெயர் ஸ்ரீ பிரபு தர்மா சேனா திரிபுவனா (Sri Maharaja Sang Sapurba Paduka Sri Trimurti Tri Buana). இவரின் மற்றொரு பெயர் ஸ்ரீ திருமூர்த்தி திரிபுவனா (Sri Trimurti Tribuwana).

நீல உத்தமனுக்கு மூன்று தம்பிமார்கள். அவர்களின் பெயர்கள் பிச்சித்திரம் (Bichitram), பலதூதானி (Paladutani), நீலதனம் (Nilatanam).

நீல உத்தமனின் தாயாரின் பெயர் ஸ்ரீ திருமூர்த்தி சுந்தரி (Sri Trimurti Sandari). பெயர்களைப் பாருங்கள். அனைத்துமே சமஸ்கிருதம் கலந்த தமிழ்ச் சொற்கள். (F1. 1324 – 1372* Sri Maharaja Sang Utama Parameswara)

நீல உத்தமனுக்கு மேலும் ஒரு பெயர் இருந்தது. ஸ்ரீ நீல பல்லவன் (Sri Nila Pahlawan) என்பது அந்தப் பெயர். நீல உத்தமனின் பரம்பரையினர் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அவர்களின் அழைப்புப் பெயரே சான்றாக அமைகின்றன.

பல்லவன் எனும் சொல்லில் இருந்து தான் பாலவான் (Pahlawan) எனும் மலாய்ச் சொல் உருவானது. பாலவான் என்றால் மாவீரன் என்று பொருள். இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். (2. Buyers, Christopher); (3. Taylor, Nora A.)

மஜபாகித் அரசினால் பலேம்பாங் அரசு தோற்கடிக்கப் பின்னர் நீல உத்தமனின் குடும்பத்தினர் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தான் தீவு (Bintan) சுமத்திராவிற்கு வடக்கே சிங்கப்பூருக்கு அருகாமையில் இருக்கிறது.

ஸ்ரீ விஜய அரச குடும்பத்தினருடன் பலேம்பாங்கில் இருந்த மேலும் ஓர் ஆயிரம் பேர் பிந்தான் தீவில் தஞ்சம் அடைந்தனர். இந்தப் பிந்தாங் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சி உருவாக்கப் பட்டது. அதற்கு நீல உத்தமன் தலைவர் ஆனார். (4.Tsang, Susan; Perera, Audrey)

இதற்கு முன்னர் சிங்கப்பூரில் என்ன நடந்தது என்று பார்ப்போம். 1280-ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரைத் தெமாகி (Temagi) எனும் ஒரு சிற்றரசர் ஆட்சி செய்து வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek).

தெமாகி சிற்றரசரைச் சயாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக நியமனம் செய்து வைத்து பாதுகாத்து வந்தது. தெமாகிக்கு சயாம் அரசின் பாதுகாப்பு இருந்து வந்தது. இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலுக்கு சிங்கப்பூரில் இருந்த கடல் கொள்ளையர்கள் நீல உத்தமனுக்கு உதவியாக இருந்தார்கள்.

அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். அதனால் நீல உத்தமன் சயாம் அரசின் கோபத்திற்கு உள்ளானார். இருந்தாலும் நீல உத்தமன் அதைப் பற்றி கவலைப் படவில்லை.

சிங்கப்பூரைக் கைப்பற்றியதும் அதற்கு அரசர் ஆனார். தெமாசிக் எனும் பழைய பெயரை சிங்கப்பூர் எனும் புதிய பெயருக்கு மாற்றினார்..

இப்போது இருக்கும் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் தான் முந்தைய சிங்கப்பூர் நகரம் உருவாக்கப் பட்டது. ஆற்று நெடுகிலும் சின்னச் சின்னக் குன்றுகள் இருந்தன.

அவற்றில் ஒன்று கெனிங் குன்று. அந்தக் குன்றை நீல உத்தமன் மேரு மலை (Mount Meru) என்று அழைத்தார். அங்கு இருந்து குடிப்பதற்கும் குளிப்பதற்கும் நன்னீர் கிடைத்தன.

இப்போது அந்த இடம் கெனிங் கோட்டைக் குன்று (Fort Canning Hill) என அழைக்கப் படுகிறது. (5. Dr. John Leyden 1821. Malay Annals)

அப்போது சிங்கப்பூர் ஒரு நகரம் அல்ல. ஒரு சின்ன ஊர் தான். சொல்லப் போனால் அது ஒரு சின்ன மீன்பிடி கிராமம். கடற் கொள்ளையர்களின் மறைவிடமாக விளங்கியது. சீனா நாட்டுக் கப்பல்கள் வந்து போய்க் கொண்டு இருந்தன.

மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன். சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தவரும் நீல உத்தமன் தான்.

சிங்கப்பூரின் ஆட்சியாளர் ஆனதும் நீல உத்தமன் தன்னுடைய பெயரை ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) என்று மாற்றிக் கொண்டார்.

அப்போது நீல உத்தமனின் வளர்ப்புத் தாயார் ஸ்ரீ பரமேஸ்வரி ராணியார் (Queen Paramisuri) பிந்தான் தீவில் இருந்தார். நீல உத்தமனுக்குத் தேவையான வேலையாட்கள்; அடிமைகளை அங்கிருந்து அனுப்பி வைத்தார். தவிர படகுகள்; குதிரைகள்; யானைகள் போன்றவற்றையும் அனுப்பி வைத்தார்.

அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

சிங்கப்பூர் (Singapore) எனும் பெயர் சிங்கப்பூரா (Singapura) எனும் மலாய் சொல்லில் இருந்து மருவியதாகக் கூறப் படுகிறது. மலாய் மொழியில் சிங்கா (Singa) என்றால் சிங்கம். பூரா (Pura) என்றால் ஊர். இரு சொற்களும் சேர்ந்து சிங்கப்பூரா என்று சொல்லப் படுகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதி வரும் பரமேஸ்வரா ஆய்வு நூலில் இருந்து)

பரமேஸ்வராவின் பின்புலம் – 5
===========================
தமிழ் மலர் 12.02.2018
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

நீல உத்தமன் 1347-ஆம் ஆண்டு காலமானார். அவருடைய உடல் சிங்கப்பூரின் புக்கிட் லாராங் (Fort Canning Hill) எனும் புக்கிட் லாராஙான் (Bukit Larangan) குன்றின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டது.

அவருடைய மனைவியும் அங்கே தான் புதைக்கப் பட்டார். வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய சமாதிகளை இன்று வரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேதனையான செய்தி. (1. Tsang, Susan; Perera, Audrey – 2011)

நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ விக்கிரம வீர ராஜா (Sri Wikrama Wira) என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372-ஆம் ஆண்டில் இருந்து 1386-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். (F1)

ஸ்ரீ விக்ரம வீராவின் தாயார் பெயர் ஸ்ரீ பினி (Sri Bini). அதாவது நீல உத்தமனின் மனைவியின் பெயர் ஸ்ரீ பினி. இந்தப் பினி எனும் சொல்லில் இருந்து தான் பினி (மனைவி) எனும் மலாய்ச் சொல்லும் உருவானது.

ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். ஸ்ரீ விக்ரம வீராவின் மனைவியின் பெயர் நீலா பாஞ்சாலை. இவருடைய காலத்தில் தான் சயாமிய அரசின் ஒரு பெரிய தாக்குதலும் நடந்தது.

வடக்கே சயாம் நாட்டில் இருந்து 70 கப்பல்களில் சயாமியர்கள் வந்தனர். பயங்கரமான தாக்குதல் நடத்தினர். இருந்தாலும் சிங்கப்பூரை அசைக்க முடியவில்லை. மூன்று மாதம் வரை தாக்குப் பிடித்தது.

அதற்குள் சீனாவில் இருந்து சீனக் கடற்படை களம் இறங்கி விட்டது. கடைசியில் சயாமியர்களின் முற்றுகை தோல்வியில் முடிந்தது.

இந்தக் காலக் கட்டத்தில் மஜாபாகித் அரசு ஜாவாவில் மிகவும் பலம் வாய்ந்த அரசாக விளங்கியது. சிங்கப்பூரின் துரிதமான வளர்ச்சியைக் கண்டு அதன் மீது மஜாபாகித் அரசிற்குப் பேராசை ஏற்பட்டது. குறுகிய காலத்தில் ஒரு குட்டி அரசு இப்படி அபரிதமான செல்வாக்கைப் பெற்று விட்டதே எனும் ஆதங்கம் வேறு.

மஜாபாகித் அரசின் இராணுவத் தளபதியாக காஜா மாடா (Gajah Mada) என்பவர் இருந்தார். இவரின் உண்மையான பெயர் கஜ மதன். இந்த கஜ மதன் எனும் பெயர் தான் பின்னாட்களில் காஜா மாடா என்று மாறியது.

நுசாந்தாரா (Nusantara) என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் இருந்த எல்லா அரசுகளையும் கைப்பற்றி அவற்றை மஜாபாகித் அரசின் கீழ் கொண்டு வருவதே காஜா மாடாவின் இலட்சியமாக இருந்தது. இவர் பேராவல் கொண்ட ஓர் இராணுவ தலைவர்.

சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசையும் கைப்பற்ற திட்டம் வகுத்தார். அப்போது ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமை மங்கி வந்த காலம். அந்த அரசையும் மஜாபாகித் அரசின் கீழ் கொண்டு வருவதற்குப் பயங்கரமான திட்டம் வகுத்தார்.

1350-ஆம் ஆண்டில் மஜாபாகித் அரசின் பேரரசராக ஹாயாம் ஊருக் (Hayam Wuruk) என்பவர் பதவி ஏற்றார். இவரின் அசல் பெயர் ராஜ ஜனகரன் (Rajasanagara). இவர் இராஜசா (Rajasa Dynasty) பரம்பரையைச் சேர்ந்தவர்.

இவர் சிங்கப்பூர் அரசிற்கு ஒரு தூதுச் செய்தியை அனுப்பினார். அதாவது சிங்கப்பூர் அரசு மஜாபாகித் அரசிற்கு அடிபணிந்து அதன் கீழ் ஆட்சி செய்ய வேண்டும் எனும் தூதுச் செய்தி.

அந்தச் செய்திக்கு ஸ்ரீ விக்கிரம வீர ராஜா அடிபணியாமல் மறுத்து விட்டார். அதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை. அப்படியே ராஜ ஜனகரன் சிங்கப்பூருக்கு வந்தால் அவருடைய தலையைக் கொய்யப்படும் என்றும் செய்தி அனுப்பினார். ராஜ ஜனகரன் சினம் அடைந்தார். உடனே சிங்கப்பூரைத் தாக்கத் திட்டம் வகுத்தார். 180 போர்க் கப்பல்களையும் எண்ணற்ற உதவிக் கப்பல்களையும் அனுப்பினார்.

பிந்தான் தீவு வழியாக ராஜ ஜனகரனின் கப்பல் அணிவகுத்து வரும் செய்தி சிங்கப்பூருக்கு எட்டியது. உடனே சிங்கப்பூரைத் தற்காக்க 400 போர்க் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. சிங்கப்பூர் கடற்கரைப் பகுதியில் போர் மூண்டது. அந்தப் போர் மூன்று நாட்கள் நீடித்தன.

கடற்போரில் ராஜ ஜனகரனின் கப்பல் படை அவ்வளவாக அனுபவம் இல்லாதது. அதனால் இலகுவாகத் தோற்கடிக்கப் பட்டது. இந்தப் போரில் ராஜ ஜனகரன் தோல்வி அடைந்தார். (2. A. Samad, Ahmad (1979), Sulalatus Salatin – Sejarah Melayu)

அதன் பின்னர் ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார்.

ஸ்ரீ விக்ரம வீராவிற்குப் பின்னர் ஸ்ரீ ரானா விக்கிரமா (Sri Rana Wikrama) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் சிங்கப்பூரின் மூன்றாவது ராஜா. 1375-ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்தார். (3. Dr. John Leyden – 1821)

ஸ்ரீ ராணா வீரா கர்மா சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா (Sri Maharaja Parameswara) என்பவர் பதவிக்கு வந்தார். இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இந்த ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் தான் மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வரா.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதி வரும் பரமேஸ்வரா ஆய்வு நூலில் இருந்து தொகுக்கப் பட்டது)

References:
(1) Tsang, Susan; Perera, Audrey (2011), Singapore at Random, Didier Millet

(2) A. Samad, Ahmad (1979), Sulalatus Salatin – Sejarah Melayu) , Dewan Bahasa dan Pustaka, p. 47, ISBN 983-625-601-6

(3) Dr. John Leyden (1821). Malay Annals பக்: 44–49

Footnotes:

(F1) 1372 – 1386 Paduka Sri Bikrama Vira di-Raja [Pekerma Wira], Raja of Temasek, elder son of Sri Maharaja Sang Utama Parameswara, Batara Sri Tribuwana. Styled Raja Kechil Besar before his accession. Attacked several times by Radin Inu Merta Wangsa of Majapahit, and the city burned and its inhabitants put to the sword by a Palembang invasion in 1377. m. at Singapore, Tuan Putri Nila Panjadi [Tilai Puchudi], of the line of Raja Suran and daughter of Raja Jambuga Rama Mudaliar, Raja of Keling (or Kalinga, in South India). He d. at Temasek, ca 1386, having had issue, including an eldest son:

1) Raja Muda, who succeeded as Paduka Sri Ratna Vira Vikrama di-Raja, Raja of Temasek
Source: http://www.royalark.net/Malaysia/malacca2.htm

(F2) 1399 – 1413 Paduka Sri Maharaja Parameswara*, Raja of Malacca, son of Paduka Sri Ratna Vira Vikrama di-Raja, Raja of Temasek, educ. privately. Succeeded as ruler of Singapura Temasek on the death of his father, ca 1399.
Expelled from Temasek by the Batara of Majapahit working in collusion with the Bendahara, Sang Ranjuna Tapa, 1401. Removed to Muar, on the mainland, then to Bertam (when aged no more than eighteen years??).

Received several Chinese envoys and trading missions, and recorded as paying homage to the Chinese Emperor 3rd October 1405. He visited China together with his wife and son and a retinue of 540 persons, being received at Nanking on 14th August 1411 and remaining three months before returning to Malacca.

1) Sri Wangsa di-Raja [Sa-li-wang-la-cha, elder brother of Mu-kan-sa-yu-ti-er-sha and son of Pai-li-mi-su-la). Received by the Emperor of China on 3rd September 1418 as Sa-li-wang-la-cha, envoy and elder brother of Mu-kan-sa-yu-ti-er-sha and son of Pai-li-mi-su-la.

2) Raja Muda Paduka Sri Ratna Adivikrama di-Raja [Seri Rama Adikerma], who succeeded as Paduka Sri Sultan Iskandar Shah [Mu-kan-sa-yu-ti-er-sha], Sultan of Malacca (s/o Devi Putri)
Source: http://www.royalark.net/Malaysia/malacca2.htm

(F3) The accuracy and historicity of the Malay Annals is in doubt according to historians.
Source: http://www.royalark.net/Malaysia/malacca2.htm

பரமேஸ்வராவின் பின்புலம் – 7
மலாக்கா தோற்றத்தில் மாறுபட்ட கருத்துகள்
=========================================
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

பாசாய் இளவரசி மாலிக் உல் சாலே ((Malik ul Salih) என்பவரைப் பரமேஸ்வரா திருமணம் செய்து கொண்ட பின்னர் மதம் மாறினார் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மதம் மாறிய பின்னர் பாரசீகப் பட்டத்துச் சொல்லான ஷா எனும் சொல்லை இணைத்துக் கொண்டார். தன்னுடைய பெயரை இஸ்கந்தார் ஷா என்று மாற்றிக் கொண்டார் என்றும் சொல்கின்றார்கள்.

(சான்று: Andaya, B. W. (2001). A history of Malaysia. Honolulu: University of Hawaii Press, p. 43.)

செஜாரா மெலாயு வேறு ஒரு கருத்தையும் முன் வைக்கிறது. 1390-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் ராஜாவாக இருக்கும் போது பாரசீகப் பட்டத்துச் சொல்லான ஷா எனும் சொல்லைப் பரமேஸ்வரா பயன்படுத்தினார் என்று சொல்கிறது. அந்தக் காலம் தொடங்கி பரமேஸ்வராவின் பெயர் இஸ்கந்தார் ஷா என்றும் முன் வைக்கிறது.

மற்றொரு கருத்தையும் செஜாரா மெலாயு முன் வைக்கிறது. மலாக்காவின் மூன்றாவது சுல்தானாக ஆட்சி செய்த முகமட் ஷா காலத்தில் தான் ஆளும் வகுப்பினரும் குடிமக்களும் மதம் மாறினார்கள். மதம் மாற்றம் பற்றி பல்வேறான கருத்துகள் நிலவிய போதும் சுல்தான் முஷபர் ஷா காலத்தில் தான் மலாக்காவில் இஸ்லாம் மதம் ஆழமாய் வேறூன்றியது என்று சொல்லலாம்.

(Malay Annals noted that it was during the reign of the third ruler Muhammad Shah that the ruling class and the subjects began to convert to Islam. While there are differing views on when the Islamisation of Malacca actually took place, it is generally agreed that Islam was firmly established by the reign of Muzaffar Shah.)

1511-ஆம் ஆண்டில் மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைபற்றிய பின்னர் டோம் பைர்ஸ் (Tome Pires) எனும் வரலாற்றாசிரியர் ஒரு வரலாற்று நூல் எழுதினார். அதன் பெயர் சுமா ஓரியண்டல் (Suma Oriental). அந்த நூலில் மலாக்காவின் தொடக்க கால வரலாற்றைப் பற்றி அவர் வேறு விதமாகப் பதிவு செய்து உள்ளார்.

அவர் சொல்கிறார்: பரமேஸ்வராவிற்குப் பின்னர் அவருடைய மகன் அரியணை ஏறினர். அவரின் பெயர் செக்கும் டாஷா (Chaquem Daraxa). இவர் தான் தன்னுடைய 72-ஆவது வயதில் மதம் மாறினார் என்று சொல்கிறார்.

(சான்று: Linehan, W. (1982). The kings of 14th century Singapore. In T.S.D.M Sheppard (Ed.), Singapore 150 Years. Singapore: Malaysian Branch of the Royal Asiatic Society, p. 66.)

மலாக்காவின் தொடக்ககால வரலாற்றைப் பற்றி இரு வகையான மாறுபட்ட பதிவுகள் உள்ளன. செஜாரா மலாயு (Sejarah Melayu) எனும் மலாய் வரலாறு ஒருவிதமாகப் பதிவு செய்து உள்ளது. அதே சமயத்தில் டோம் பைர்ஸ் வேறு விதமாகப் பதிவு செய்து உள்ளார்.

மலாய் வரலாறு என்பதை ஆங்கிலத்தில் Malay Annals என்று அழைக்கிறார்கள். 15-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. 1612-ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தால் திருத்தம் செய்யப் பட்டது.

இருப்பினும் இரு பதிவுகளுமே ஒரே அடிப்படையிலான சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

மலாக்கா சுல்தான்களின் வழித் தோன்றல்கள் சுமத்திராவில் இருக்கும் பலேம்பாங்கில் இருந்து வந்ததாகச் சொல்கின்றன. பலேம்பாங்கில் இருந்து மலாயா பெருநிலப் பகுதிக்குள் காலடி வைத்த ஓர் ஆட்சியாளரையே இரு பதிவுகளும் சுட்டிக் காட்டுகின்றன.

(சான்று: Hall, D.G.E. (1981). A History of Southeast Asia. Basingstoke, Hants: Macmillan, p. 225.)

பரமேஸ்வரா எனும் பெயரை செஜாரா மலாயு கடைசி வரையில் ஓர் எடுத்துக்காட்டாகக் கூட முன்நிறுத்திச் சொல்லவில்லை. செஜாரா மலாயு வரலாற்றுப் பதிவில் பரமேஸ்வரா எனும் பெயரே இல்லை. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்கே தான் செஜாரா மலாயுவின் பதிவுகளில் சற்றே மாயை ஏற்படுகிறது. செஜாரா மலாயுவை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறை சொல்லவில்லை. அது ஓர் அற்புதமான வரலாற்றுக் களஞ்சியம்.

ஆனால் பரமேஸ்வரா விசயத்தில் மட்டும் ஒரு தொய்வுநிலை ஏற்பட்டு உள்ளது. அதாவது பரமேஸ்வரா எனும் பெயரைச் சொல்லாத பட்சத்தில் ஏற்படும் நிழல் நிலை. அதைத் தான் சொல்ல வருகிறேன்.

பரமேஸ்வராவின் பெயரைக் குறிப்பிடாமல் செஜாரா மலாயு இப்படி சொல்கிறது.

ஸ்ரீ திரி புவனா (Sri Tri Buana) என்பவர் புராண காலத்து ஆட்சியாளர். இவர் மகா அலெக்ஸாண்டரின் பரம்பரையைச் சேர்ந்தவர். பலேம்பாங்கில் இருந்து வெளியேறியவர். துமாசிக் எனும் தீவில் ஒரு புதிய பட்டணத்தை உருவாக்கியவர். அதற்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தவர்.

(சான்று: Teixeira, M. (1961). The Portuguese missions in Malacca and Singapore, 1511–1958. Lisboa: Agencia Geral Do Ultramar, p. 21.)

ஸ்ரீ திரி புவனாவின் பரம்பரையினர் சிங்கப்பூரை ஐந்து தலைமுறைகளுக்கு ஆட்சி செய்தனர். சிங்கப்பூரின் கடைசி சுல்தானாக இருந்தவர் சுல்தான் இஸ்கந்தர் ஷா. இவர் ஆட்சி செய்த போது மஜாபாகித் அரசு சிங்கப்பூரின் மீது படையெடுத்தது. இருப்பினும் தோல்வி கண்டது.

மலாக்காவின் தொடக்கக் காலத் தோற்றம் பற்றி மேலும் மூன்று எழுத்துச் சுவடிகள் உள்ளன. அந்தச் சுவடிகள் என்ன சொல்கின்றன. அதையும் பாருங்கள்.

முதலாவது சீன யாத்திரீகர் வாங் தா யுவான் (Wang Ta-yuan) என்பவரின் பதிவு.

இரண்டாவது ஜாவா தீவின் வரலாற்றைச் சொல்லும் பதிவு. அந்தப் பதிவின் பெயர் பாரத்தோன் (Pararaton). 1349-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.

மூன்றாவது நாகரகிருத்தகமம் (Nagarakritagama). இது ஜாவா வரலாற்றுக் கவிதை. 14-ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டது. இந்த வரலாற்றுக் கவிதையிலும் துமாசிக் பற்றி சொல்லப்பட்டு உள்ளது.

(சான்று: Wang, G. (2005). The first three rulers of Malacca. In L., Suryadinata (Ed.), Admiral Zheng He and Southeast Asia. Singapore: International Zheng He Society and Institute of Southeast Asian Studies, pp. 32, 34-35.)

சீன யாத்திரீகர் வாங் தா யுவான் இப்படிச் சொல்கிறார்: சயாமியர்கள் 70 தோனிகளில் சிங்கப்பூருக்கு வந்தார்கள். சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தினார்கள். சயாமியர்களின் தாக்குதல் செய்தியை அறிந்த சீனா தன் கடல் படையை அனுப்பியது.

சிங்கப்பூருக்கு வந்த சீனக் கடல் படை சயாமிய கடல் படையைத் தாக்கியது. சீனாவின் எதிர்த் தாக்குதலைச் சயாமியர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பின் வாங்கினர். அப்படியே அவர்கள் சயாமிற்கே திரும்பிச் சென்றனர்.

அதன் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூர் மீது மஜாபாகித் பேரரரசு மீண்டும் படை எடுத்தது. அந்தப் படையெடுப்பில் சிங்கப்பூர் சூறையாடப்பட்டது. கட்டடங்களும் கோட்டைகளும் தரைமட்டமாக்கப் பட்டன.

(சான்று: John Leyden’s Malay annals. (2001). Malaysia: Malaysian Branch of the Royal Asiatic Society, p. 21.)

அடுத்து ஜாவா தீவின் பாரத்தோன் எனும் வரலாற்றுப் பதிவு இப்படிச் சொல்கிறது: மஜாபாகித் அரசின் தளபதியாக காஜா மாடா (Gajah Mada) என்பவர் இருந்தார். அப்போதைக்கு இவர் மஜாபாகித் அரசில் ஒரு பிரபலமான அமைச்சர்.

(மேல் விவரங்கள் இன்றைய தமிழ் மலர் 14.02.2018 நாளிதழில்)
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதி வரும் பரமேஸ்வரா ஆய்வு நூலில் இருந்து தொகுக்கப் படுகிறது)

 


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s