வல்லினம் – Vallinam


வல்லினத்தின் 9-ஆவது இலக்கிய விழா!

vallinam2கடந்த ஒவ்வொரு ஆண்டைப் போலவே இவ்வாண்டும் வல்லினம் கலை இலக்கிய விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாண்டு 100 -ஆவது வல்லினம் இதழை ஒட்டி இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. கடந்த எட்டு ஆண்டுகளாக வல்லினத்தின் பயண அனுபவ ஆவணப்பட காட்சியோடு நிகழ்ச்சி தொடங்கும்.

களஞ்சிய வெளியீடு

இவ்விழாவுக்கென தயாரிக்கப்பட்ட 464 பக்க நவீன இலக்கிய களஞ்சியம் மலேசிய மற்றும் சிங்கை படைப்பாளிகளின் ஆக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நேர்காணல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள், ஆய்வுகள் என பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்ட இக்களஞ்சியம் சமகால மலேசிய சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் முகமாகத் திகழும்.

வல்லினம் 100 – விமர்சனம்

சிங்கை எழுத்தாளர்களான சிவானந்தன் நீலகண்டன், உமா கதிர், ராம் சந்தர் மற்றும் மலேசிய எழுத்தாளர் இளம்பூரணன் ஆகியோர் ‘வல்லினம் 100′ களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள சிறுகதை, கட்டுரை, விமர்சனக்கட்டுரைகள் மற்றும் நேர்காணல் ஆகியவை குறித்து தத்தம் கருத்துகளை/ விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றுவர்.

எழுத்தாளர் கோணங்கி வருகை

vallinam1கல்குதிரை என்ற சிற்றிதழை நிறுவி அதனை நிர்வகிக்கும் கோணங்கி, காத்திரமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.  அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினர் விளக்கு விருது வழங்கி கோணங்கிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்கள்.  பல சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்துள்ள கோணங்கியின் ஆளுமை விசாலமானது. நிகழ்ச்சியில் அவரது சிறப்புரை இடம்பெறும்.

போட்டி முடிவுகள்

இவ்வாண்டு வல்லினம் நடத்திய சிறுகதை, கட்டுரை மற்றும் பத்திகளுக்கான போட்டி முடிவு இவ்விழாவில் அறிவிக்கப்படும். வெற்றியாளர் ஒருவருக்கு தலா 1,000 ரிங்கிட் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

நிகழ்ச்சி விபரங்கள்

நாள் : 17.9.2017 (ஞாயிறு )

இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (ம இ கா தலைமையகம் எதிர்ப்புறம்)

நேரம் : நண்பகல் 2.00

(1.30 க்கு உணவு வழங்கப்படும் )

 இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

 அனைத்துத் தொடர்புகளுக்கும் :

.நவீன் – 0163194522

.பாண்டியன் : 0136696944

தயாஜி : 0164734794மன்னர் மன்னனுக்கு ஒரு திறந்த மடல்.

 

மதிப்பிற்குறிய மன்னர் மன்னன் அவர்களுக்கு. தங்கள் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. தாங்கள் பல ஆசிரியர்களை உருவாக்கிய ஆசிரியர். அவ்வகையில் உங்களைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் நல்லனவற்றையே கூறியுள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த துறை மீதும் அதில் தாங்கள் காட்டிய நாட்டம் மீதும் எனக்கு மதிப்புண்டு. நீங்கள் ஒரு நல்லாசிரியர். அதேபோல தாங்கள் மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்வானபோதும் தங்களுக்கு மனமுவந்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். உங்கள் மூலம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என நம்பினேன்.
தாங்கள் தலைவராக இருந்த அந்த ஈராண்டுகளில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் நடந்துவிடவில்லை. மீண்டும் ராஜேந்திரனின் ஆதிக்கமே இருந்தது. சங்கத்தில் உங்கள் சொல்லுக்கு மரியாதை இல்லை, உங்கள் திட்டங்களுக்குப் பெரிய தடைகள் இருந்தன என்றெல்லாம் நண்பர்கள் மூலம் அவ்வப்போது கேள்விப்படுவதுண்டு. கேள்விப்படும் தகவல்களை விமர்சிக்கும் ஆயுதமாக நான் எப்போதுமே பயன்படுத்துவதில்லை. எனவே அதுகுறித்து பேச ஒன்றும் இல்லை.
இந்த நிலையில்தான் நான் அண்மையில் நடந்துமுடிந்த எழுத்தாளர் சங்க ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதற்கு முன்பு சை.பீர்முகம்மது ராஜேந்திரனை எதிர்த்துப் போட்டிப்போட்டபோது கலந்துகொண்டது. அந்தத் தேர்தல் மேடையில் ராஜேந்திரன் கொடுத்த ஒரு வாக்குறுதி என் நினைவில் இன்றும் இருக்கிறது. அதாவது, யாரோ ஒருவர் மூலம் நன்கொடையாகக் கிடைக்கப்போகும் ஒரு லட்சம் ரிங்கிட்டில் தொடர்ந்து மலேசிய எழுத்தாளர்களின் நூல்களை அச்சாக்கப் போவதாகச் சொன்னார் ராஜேந்திரன். அப்படி ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என உங்களுக்கும் தெரியும். ஆனால் அந்த வாக்குறுதியை நம்பி ஓட்டுப்போட்டவர்கள் பலர். அந்தக் கசப்பு இன்னும் மனதை விட்டு அகலவில்லை. சரி இம்முறை நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர், நேர்மை பிசகாதவர், இலக்கிய அறத்தில் நம்பிக்கையுள்ளவர் என்ற தைரியத்தில் மனதைத் திடப்படுத்திக்கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின் ஆண்டுக்கூட்டத்துக்கு வந்தேன். பலரையும் சந்தித்தேன். மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
ஆண்டுக்கூட்டத்தில் ராஜேந்திரனின் தேர்தல் பிரச்சார படத்தை ஒளிபரப்புகிறார்கள் என்று கொஞ்ச நேரத்தில் கோபப்பட்டுவிட்டேன் ஐயா. பக்கத்தில் அமர்ந்திருந்த அன்பர்தான் அது  எழுத்தாளர் சங்க ஆவணப்படம் எனக்கூறி ஆசுவாசப்படுத்தினார். எழுத்தாளர் சங்கம் என்பது ராஜேந்திரன் மூலமே மேம்பட்டது எனக்கூறும் பிரச்சாரப் படத்தை அந்த அரங்கில் ஒளிபரப்பும் அவசியம் புரியவில்லை. எவ்வித முன்முடிவும் இன்றி அப்படத்தைக் காணும் ஒருவர் ராஜேந்திரனுக்கு ஓட்டுப்போடுவது உறுதி. அந்த அளவிற்கு அதில் ராஜேந்திரனின் நாமமே படர்ந்திருந்தது.  அந்தப்படத்தில் அவ்வப்போது “சத்தியமா இது எழுத்தாளர் சங்க ஆவணப்படம்தான்டோ டொட்டடோ!” என கவுண்டமணி குரலை  ஒலிக்க வைத்திருந்தால் இதுபோன்ற தேவையில்லாத சந்தேகம் எனக்கு வராது.
அதெல்லாம் போகட்டும் ஐயா. நான் சொல்ல வந்ததே வேறு. நிகழ்ச்சியில் நீங்கள் உரையாற்றினீர்கள். அதில் இனிப்பான செய்தி என மூன்று விடயங்களைக் கூறினீர்கள். நானும் மற்றவர்களைப் போல அந்த இனிப்பைச் சுவைக்க நாக்கை நீட்டியபடி காத்திருந்தேன். நீங்கள் சொன்ன இனிப்புச் செய்தி இவைதான்.
1.மே மாதம் முதல் அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் 5000 ரிங்கிட் சங்கத்துக்கு வழங்குவார். அப்பணம் மூலம் மாதம் ஒரு எழுத்தாளரின் நூல் பதிப்பிக்கப்படும்.
2. ஒருவருடத்தில் பத்து எழுத்தாளர்களுக்கு அமைச்சரே முன் வந்து எழுத்தாளர்களின் நூலை வெளியீடு செய்வார்.
3.உமா பதிப்பகத்தில் மலேசிய எழுத்தாளர்களின் நூல்கள் தனி ஒரு வரிசையில் அடுக்கிவிற்பனை செய்யப்படும்.
எல்லோரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் பாருங்கள் சின்ன வயதில் எனக்கு மூளையில் சுலுக்குவிழுந்திருக்கும்போல. என்னால் உங்கள் பேச்சில் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. மாறாக சில கேள்விகள் மட்டுமே எழுந்தன. ஆனால் அந்தக் கேள்விகளை அந்த அரங்கில் கேட்க இடமில்லை. சங்கம் குறித்து கேள்வி எழுப்ப ஏழு நாட்களுக்கு முன்பே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் என  ஒரு சட்டம் வைத்துள்ள தாங்கள் தேர்தல் அன்று பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற பொதுவிதியை ஏன் மீறினீர்கள் எனப்புரியவில்லை. சரி அதையும் மன்னித்துவிடுவோம். கேள்விக்கு வருவோம்.
1. அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் பணம் கொடுப்பதற்கும் ம.இ.கா கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நிரந்தமாகப் பணம் வருவதற்கு அந்தக் கட்சியிடம் உறுதியான ஒப்புதல்கள் நடந்திருக்க வேண்டும். அப்படியான ஒப்பந்தம் கையெழுத்தானதா?. அன்றி, மிகவிரைவில் வரக்கூடிய தேர்தலில் பாரிசான் ஆட்சியை இழந்தாலோ டாக்டர் சுப்ரமணியம் தொகுதியை இழந்தாலோ அவர் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பிடிக்காவிட்டாலோ நீங்கள் கூறியபடி அவர் 5000 ரிங்கிட் வழங்குவாரா? அவர் சொந்தப்பணத்தையா கொடுக்கப் போகிறார்? அப்படி அவர் வழங்காவிட்டால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை தேர்தல் பிரச்சாரம் என எடுத்துக்கொள்ளலாமா? இப்படி ராஜேந்திரனின் சாதனை என நீங்கள் பிரச்சாரம் செய்ய மேடையில் சொன்ன விடயம் தொடர்ந்து நடக்குமா என சந்தேகிக்க வைக்கிறது.
2.5000 ரிங்கிட் என்பது என்ன கணக்கு? எல்லா வகை நூலையும் 5000 ரிங்கிட்டில் தயாரிக்க முடியுமா? அது 64 பக்க புத்தகம் என்றால் அதிகபட்சம் 3000.00 ரிங்கிட் செலவாகலாம். அப்படியானால் மீதம் 2000.00 ரிங்கிட்டை என்ன செய்வீர்கள்? சரி பணத்தை சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் கொடுப்பீர்களா அல்லது அந்தக் குத்தகையைச் சங்கமே எடுத்துக்கொள்ளுமா? இதற்கான அடிப்படை திட்ட வரையறை உண்டா?
3.தமிழ் இலக்கியம் சார்ந்த பரிட்சயம் இல்லாத டாக்டர் சுப்ரமணியம் ஒரு நூலை வெளியிடுவது அவ்வளவு பெரிய அங்கீகாரமா? மிகவிரைவில் வரப்போகும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலுக்குச் சுப்ரமணியம் வெற்றிபெற சங்கம் அமைத்துக்கொடுக்கப்போகும் மேடை என இதை கருதலாமா? ஒருவேளை தேர்தலில் தோற்று அவர் அமைச்சராக இல்லாவிட்டாலும் தொடர்ந்து அவரை அழைப்பீர்களா?அப்படியானால் இந்த அறிய வாய்ப்பு எத்தனை ஆண்டுகளுக்கு?
4.மலேசியாவில் உள்ள ஒரு புத்தகக் கடையில் மலேசிய புத்தகத்தை விற்பனைக்கு வைப்பதுதான் உங்கள் அதிகபட்ச சாதனையா? தமிழ்நாட்டில், டெல்லியில், இலங்கையில் என உலகில் எங்கெங்கோ மலேசிய இலக்கியத்துக்குப் பீடம் அமைப்பதாகச் சொல்லும் சங்கம் மலேசியாவில் உள்ள ஒரு புத்தகக் கடையில் புத்தகத்தை விற்பனைக்கு வைப்பதை சாதனையாக சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால் முகமது அபு பாக்காரும் சாதனையாளர்தான். யார் அது எனக்கேட்கிறீர்களா? அவர் எங்கள் ஊரில் பிரியாணி கடை நடத்துகிறார். என்ன ஆச்சரியம் பாருங்கள், பிரியாணிக்கடையில் பிரியாணி விற்கிறார். அதுவும் மலேசிய நாட்டின் கோழிகளையும் ஆடுகளையும் கொண்டு சமைத்த பிரியாணி. மலேசிய நூல்களை மலேசிய புத்தக்கடைகளில் விற்பது சாதனை என்றால் மலேசிய கோழிகளை பிரியாணியாக்கி மலேசிய உணவகத்தில் விற்பதும் சாதனைதானே ஐயா. அடுத்தத் தேர்தலில் அவரையும் பாராட்டி ஓரிரு வார்த்தைகள் பேசிவிடுங்கள். நீங்கள் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் அல்லவா!
ஐயா, நீங்கள் கல்வியாளர். உங்களை மிரட்டியெல்லாம் யாரும் எதையும் சொல்ல வைத்திருக்க முடியாது. நீங்கள் நல்லது கெட்டது அறிந்தவர். தேர்தலின்போது மேற்கண்டத்திட்டங்களைக் கூறி அதற்கெல்லாம் ராஜேந்திரனே காரணம் என நீங்கள் கூறிய நோக்கம் என்னவென்று உங்களுக்கே தெரியும். ஒருவேளை உங்களின் சார்புநிலையின் மேல் நியாயம் கற்பிக்கலாம். இருக்கட்டும். ஆனால் மேற்கண்ட திட்டங்களில் ஒன்று நடக்காமல் போனாலும் நீங்கள் பொறுப்பெடுப்பீர்களா? உங்கள் வாக்குறுதியை நம்பி ஓட்டுப்போட்டவர்களுக்கு ஏதேனும் பதிலைச் சொல்வீர்களா? அதிகபட்சம் உங்களால் சிரித்துக்கொண்டே ஒரு மன்னிப்புக் கேட்க முடியும்.
இந்தக் கட்டுரையால் எதுவும் மாறிவிடப்போவதில்லை என எனக்குத் தெரியும். இது ஒரு பதிவு. பொய்களைத் தூவிவிட்டு நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடுங்கள். வருங்காலம் உங்களைப் பற்றி பேசும்போதெல்லாம் இந்த உண்மையையும் இணைத்தே உங்களை மதிப்பிடும். உங்கள் ஒட்டுமொத்த பொதுவாழ்வில் அழியா கறையாக இவ்வுண்மை  துருத்திக்கொண்டே இருக்கும்.

வழக்கறிஞர் பசுபதியும் பத்திரிகை அறமும்!

கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான். சண்முகசிவா தந்தை போன்றவர் என்றால் பசுபதி முன்மாதிரி என அடிக்கடி சொல்வதுண்டு. தந்தையின் மடியில் படுக்கலாம், கோபித்துக்கொள்ளலாம். திட்டலாம். ஆனால், முன்மாதிரி ஆளுமையைத் தள்ளி நின்று கவனித்தபடியே இருக்கவேண்டும். அவர்கள் செயல்களை கவனிப்பதன் மூலமே கற்றல் நடக்கும்.

எனக்கு அந்த அவதூறு குறித்து ஏதும் தெரியுமா எனக்கேட்ட அழைப்புகள் அவை. எனக்கு மிக அணுக்கமாக இருந்த நண்பர்கள் உட்பட பலரும் அவரது நேர்மை குறித்தும் அவர் முன்னெடுப்புகள் குறித்தும்  சந்தேகங்களை எழுப்பியதுண்டு. என்னால் அவர்களை எப்போதும் பரிதாபமாகவே பார்க்க முடிந்தது. சேவை செய்வதாகச் சொல்லிக்கொள்பவர், வாழ்வில் ஏதோ பறிகொடுத்தவர்கள் போல போலி முகத்துடன் பவனிவரும் சூழலில் தளராத உற்சாகத்துடன் ஓர் இளைஞனைப் போன்ற அவரது துள்ளல், வெந்ததைத் தின்று வேளை வந்தால் போகும் அவநம்பிக்கைவாதிகளுக்கு உவக்காது. எப்போதும் சமூகத்தின் முன் தான் எதையெல்லாம் இழந்தேன் என்ற புகார்களுடனும் போலியான கோபத்துடனும் தன்னிச்சையாய் ஏற்படுத்திக்கொள்ளும் சோகத்துடனும் உலா வந்து ‘சமூக அந்தஸ்தை’ பெற்றுக்கொண்டவர்களுக்கு அவரது முன்னெடுப்புகளின் தொடர் வெற்றிகளுக்குப்பின் உள்ள உழைப்பை வாழ்நாள் முழுவதும் அறிந்துகொள்ள முடியாது.

மலேசிய இலக்கிய – அரசியலில் தனி இடம் பிடித்த ‘செம்பருத்தி’ இதழ் வழக்கறிஞர் பசுபதியின் முயற்சியில் வந்துகொண்டிருந்த காலம்.  நான் 20 வயதில் செம்பருத்தி இதழ்களை என் கல்லூரி மாணவர்களுக்காக வாங்க அவரைச் சந்தித்தபோது அலுவலகத்தில் அமரவைத்து அவர் முதலில் பேசிய வார்த்தை, “வருங்கால தமிழ்ப்பள்ளி ஆசிரியராகப் போறிங்க. சமுதாயத்துல என்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியணும். நீங்க புரட்சிகரமா எழுதணுமுன்னு சொல்லமாட்டேன். ஆனால் எல்லாவற்றையும் பற்றிய விழிப்புணர்வு இருக்கணும்…” எனக்கூறி சில துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்தார். அதில் உள்ள கருத்துகள் குறித்து சக நண்பர்களிடம் விவாதிக்கச் சொன்னார். என்னிடம் இலக்கியம் தவிர அப்போது அரசியல் விழிப்புணர்வு குறித்து யாரும் பேசியதில்லை. எழுத்தாளனுக்கு அரசியல் விழிப்புணர்வு வேண்டும் எனக்கூட அப்போது எனக்குத் தெரியாது. நான் தூரத்தில் இருந்தே பசுபதியை ரசிக்க ஆரம்பித்த தினங்கள் அவை.  சுய இலாபத்திற்காகவும் தங்களை முன்னிலைப் படுத்துவதற்காகவும் எளிதாகக் கையாள வேண்டிய பிரச்னையை கையிலெடுத்து ஆரவாரம் பண்ணும் கூட்டத்திற்கு மத்தியில் அவர் முன்வைக்கும் கருத்துகளும் செயல்திட்டங்களும் ஒரு தேர்ந்த தலைமைத்துவத்தையே எனக்கு உதாரணம் காட்டியது.

ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியரானவுடன், தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த அரசு சார்பற்ற இயக்கங்களுக்குள் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது ஏற்படும் திடீர் மாற்றங்களை நேரடியாகவே கண்டுள்ளேன். பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட (PASS) அவர் தமிழ் அறவாரியத்தின் தலைவரானபின் விரிவாக அறிமுகம் கண்டு பரவலானது. திறன்பெற்ற மாணவர்களுக்காக என்றே நடத்தப்பட்ட 21 நாள் ஆங்கில முகாம் திட்டத்தை பின் தங்கிய மாணவர்களுக்கானதாகவும் அவர் தலைமையில் மாற்றியமைத்தார். ‘மை ஸ்கில்ஸ்’ தோன்றுவதற்கு முன்பே EWRF அமைப்பின் செயல்பாட்டை மெதுநிலை மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் நகர்த்தினார். இறுதியில் ‘மை ஸ்கில்ஸ்’ அறவாரியத்தை முழுமையான சமூக மாற்றத்துக்கான ஓர் அமைப்பாகக் கட்டமைத்தும் வருகிறார். இவை அனைத்தையும் நான் வியந்தபடி பார்க்கிறேன். சமூகத்தில் நலிந்த ஒரு பகுதியை கவனிப்பதும் அதை நோக்கி தனது செயல்பாடுகளை நகர்த்துவதும் ஒரு தேர்ந்த தலைமைத்துவத்தின் தன்மை.  சமூகத்தில் ஏற்கனவே வெற்றிபெற்றவர்களை அல்லது வெற்றிப்பெறப்போபவர்களை முன்னமே அனுமானித்து தங்களின் உற்பத்தி என பீற்றிக்கொள்ளும் அரசியல் ,சமூகம் மற்றும் கல்வி இயக்கங்களுக்கு மத்தியில் தோல்வி அடைந்தவர்களை நோக்கி நீளும் கரங்கள் உன்னதமானவை.  அவரது இந்த சமூக அக்கறை அரசியல் காரணங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் தோன்றிய திடீர் மனநிலை இல்லை.

பத்து ஆராங்கில் ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து ஆரம்ப காலக்கல்வி பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி; பிரிக்பில்ட்ஸ் விவேகானந்தர் ஆசிரமத்தில் தங்கி ஆறாம் படிவ உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்து; தேசிய பல்கலைக்கழகத்தில் பயின்று; லண்டனில் சட்டக்கல்வியை முடித்த ஒருவர் மிக சாவகாசமாகவே தன் எஞ்சிய வாழ்வை வசதியாக நகர்த்தலாம். ஆனால் பசுபதியின் ஆளுமை அது அல்ல. வல்லினத்திற்காக அவரை நேர்காணல் செய்தபோது, “நான் இடைநிலைப்பள்ளி படிக்கும்போது என் ஆசிரியர்கள் எங்களுக்கு இலவசமாக வகுப்புகள் நடத்துவார்கள். பாடப் புத்தகங்களையும் பணம் கொடுத்து வாங்கும் சூழல்தான் அப்போது இருந்தது. எங்கள் ஆசிரியர்கள் தங்களுக்குக் கிடைத்த ஆசிரியர் கையேடுகளை எங்களுக்குக் கொடுத்துப் படிக்க வைத்தார்கள். முன்னாள் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களின் பயன்படுத்தாதப் பக்கத்தை அப்புறப்படுத்தி, புதிய முகப்போடு எங்களுக்குப் பயன்படுத்தக் கொடுத்தார்கள். நாங்கள் கேட்காமலேயே எங்களின் வறுமை நிலையையும் எங்கள் தேவைகளையும் எங்கள் ஆசிரியர்கள் அறிந்து செய்த உதவிகள் ‘சேவை’ எனும் அர்த்தத்தை எனக்குப் போதித்தன.இதைத் தவிர்த்து நான் கன்னியாஸ்திரிகளிடம் ஆங்கிலம் கற்றது, மேற்கல்விக்கு அரசாங்கத்திடம் உபகாரச் சம்பளம் பெற்றது என என் வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும், சமுதாயமும் சமுதாய இயக்கங்களும்தான் உதவின. மீண்டும் இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதே வேரூன்றி விட்டது. எனக்கு உதவிய இயக்கங்கள் பிரதிபலனை எதிர்பார்க்காதவை. எனவே, நான் செய்ய விரும்புவதை நேரடியாக என் சமுதாயத்திற்கே செய்கிறேன்.” என்றார்.

அவரது அந்தக் குரல் பதிவை பலமுறை கேட்டிருக்கிறேன். உண்மையின் குரல் அது. உண்மையின் குரலுக்குள் ஒரு இசை உண்டு. அதை அறிய விரும்புபவர்களுக்கே அது கேட்கும். நானறிந்து தனது முப்பது ஆண்டுகால பொதுவாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக 300க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்றவர் பசுபதி. அப்பள்ளிகளின் சிக்கலை அறிந்தவர். தமிழ்ப்பள்ளிகளில் மலாய்மொழி வளர ‘KUNTUM’ போன்ற இதழ்களை மாதம் தோறும் 500 பிரதிகளைத் தன் சொந்தச் செலவில் வாங்கி தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுத்து வந்துள்ளார். ஆனால், தமிழ்ப்பள்ளியைப் பற்றி அவர் தவறாகப் பேசுகிறார் என்ற அவதூறுக்கு அவர் முன்னெடுப்புகளில் பலன் பெற்ற எந்தப்பள்ளியும் எதிர்ப்புச்சொல்லத் தயாராக இல்லாதது வருத்தம். மலேசிய நண்பன் நாளிதழ் தொடர்ந்து அவர் குறித்து அவதூறு செய்துகொண்டிருக்கும் இச்சூழலில் அவர் தரப்பு நியாயத்தையும் வெளியிடுவதே பத்திரிகை தர்மம். மலேசிய நண்பன் அதை விரும்பவில்லை. அப்பத்திரிகைத் தரப்பு காட்ட விரும்புவது ஒருபக்க உண்மையை. மொத்த உண்மையில் அவர்கள் விரும்பும் பகுதி. அதன் மூலம் ஒரு சலசலப்பு. அதன் மூலம் மற்ற பத்திரிகைகளில் இல்லாத தனித்துவமான செய்தி. அதன் மூலம் விற்பனை.

இந்நிலையில் வழக்கறிஞர் பசுபதி தன் தரப்பில் கொடுத்த அறிக்கையில் குறிப்பிட்ட சில விடயங்களை  இங்கே சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

அவ்வறிக்கையின் வழி தமிழ்ப்பள்ளி குண்டர் கும்பல் கலாச்சாரத்தைப் பெருக்கும் இடமாக உள்ளதாக நான் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை என மறுத்துள்ளார். மாறாக, தமிழ்ப்பள்ளியில் அல்லது தேசியப்பள்ளியில் படித்தாலும் சமூக-பொருளாதார தரத்தில் பின் தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்குத் தவறான அறிமுகம் கிடைக்கும்போது எளிதில் சமூக விரோதியாகிவிடும்  வாய்ப்புகள் இருப்பதை தான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இக்கருத்தைச் சொல்ல பசுபதிக்கு எல்லாத் தகுதியும் உள்ளது. தன் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்காகச் செலவழித்து, அதன் பின்னணியில் உருவாகும் கைவிடப்பட்ட மாணவர்களை அரவணைக்க ‘மை ஸ்கில்ஸ்’ எனும் கல்லூரியை நடத்தும் ஒருவர் இச்சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் குண்டர் கும்பல் சிக்கலை அடையாளம் கண்டு அதனை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதைக் கூறுவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

இன்றுவரை, 150க்கும் மேற்பட்ட இலவச கிரிமினல் வழக்குகளை நடத்திய வழக்கறிஞரான அவர், தமிழ்ப்பள்ளி மற்றும் தேசியப்பள்ளியைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட சமூக-பொருளாதார பின்புலம்  மிக முக்கியக் காரணமாக அமைகின்றது என்ற அவரது கருத்தில் உள்ள அனுபவத்தில் கண்ட உண்மையை ஆராயாமல் அதை திரித்துக்கூறுதல் என்பது பத்திரிகைத்துறைக்கு அவமானம்.

தமிழ்ப்பள்ளி குறித்து ஒரு கருத்தைச் சொன்னால் பொங்கி எழுபவர்கள் அனைவரும் வறுமையான பின்புலத்தைக் கொண்டிருக்கும் ஏழை இந்திய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பில் என்றாவது விரிவான விவாதம் செய்துள்ளோமா என சிந்தனை செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

பசுபதி தன் அறிக்கையில், 40% மாணவர்கள் தமிழ்ப்பள்ளிச் சூழலிலேயே நிராகரிக்க / புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றால், இடைநிலைப் பள்ளிகளில் இவர்களது எதிர்காலம் நிச்சயம் இருண்டுவிடும் என்கிறார். எனவே பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் போன்றவை இம்மாணவர்களின் அடைவுகளை பின்தொடர்ந்து கவனித்துவர வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைப்பதோடு, முதலாம் ஆண்டு படிக்க மாணவர்கள் நுழையும் காலம் தொட்டே நாம் இவ்வேலைகளைச் செய்ய வேண்டும் என அச்சந்திப்பில் அவர் கூறிய எவையும் அச்சில் ஏறாதது ஆச்சரியம்.

“SPM தேர்வை அடைவதற்கு முன்பதாகவே 20% இந்திய மாணவர்கள் பள்ளிகளிலிருந்து நீக்கப்படுவது அனைவரும் அறிந்த விபரம். இவர்களில் பெரும்பாலானவர்கள் குண்டர் கும்பலில் இணையும் அபாயமும் அதிகமாகவே உள்ளது. அதனால், தமிழ்ப்பள்ளிகளைக் கடந்து நாம் நமது சேவையை விரிவாக்க வேண்டியுள்ளது” என்ற அவரது கூற்றை நான் ஒரு நல்ல தலைவரின் குரலாகவே பார்க்கிறேன்.

எல்லாவற்றையும் மீறி தனது ஒரே மகளையும் தமிழ்ப்பள்ளியில் சேர்த்து தனது சகோதரர்களும் தமிழ்ப்பள்ளியில் படிப்பதை உறுதி செய்து சொல்லுக்கும் செயலுக்கும் ஏற்ப நடக்கும் ஒருவரின் ஆளுமையை அவதூறுகள் அழித்துவிட முடியும் எனத்தோன்றவில்லை. அரசு புள்ளிவிபரத்தில் மொத்த குண்டர் கும்பலில் 70% நாம் என்ற உண்மைக்கு முகம் கொடுக்கவும் அதை மாற்ற எள்ளளவும் முனையாமல் வக்கற்றிருக்கும் நாம், அப்பணியை தன் தலையாய நோக்கமாக நிறைவேற்றும் ஒருவரின் பேச்சில் உள்ள அக்கறையின் வெளிபாட்டைக் குறைக்கூறலாகக் கற்பிதம் செய்யும் செயலுக்கு ‘இயலாமையில் குரைப்பு’ என படிமம் கொடுக்கலாம்.


SOURCE :http://vallinam.com.my/version2/?p=2525

கலை இலக்கிய விழா 7 : ஒரு பார்வை

kulaly

ட

dr

adavan

imayam

வல்லினம் கலை இலக்கிய விழா 7, இம்முறை மலாயா பல்கலைக்கழகத்தில் நவம்பர் முதல் நாள் நடைபெற்றது.  இவ்வாண்டு கலை இலக்கிய விழாவில் நான்கு இளம் படைப்பாளர்களின் நூல்கள் வெளியீடு கண்டன. அவை முறையே ம.நவீனின் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’, அ.பாண்டியன் எழுதிய ‘அவர்கள் பேனாவின் இருந்து கொஞ்சம் மை’ எனும் மலாய் இலக்கியம் குறித்த கட்டுரைத்தொகுப்பு, விஜயலெட்சுமி எழுதிய ‘துணைக்கால்’ கட்டுரைத் தொகுப்பு, தயாஜி எழுதிய ‘ஒளி புகா இடங்களின் ஒலி’ எனும் பத்திகளின் தொகுப்பு ஆகும். எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. மலாயா பல்கலைக்கழகத்தின் நூலகத்தலைவர் அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக அமைந்தது ஓவியர் சந்துருவின் ஓவியக் கண்காட்சி. ‘தோட்டமும் வாழ்வும்’என்ற கருப்பொருளில் அந்த ஓவிய கண்காட்சி நடைபெற்றது. கலை இலக்கிய விழாவில் திறப்பு விழா செய்யப்பட்ட ஓவிய கண்காட்சி தொடர்ந்து இருவாரம் பார்வையாளர்களுக்காக திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு 7-வது கலை இலக்கிய விழா தொடங்கியது. தீபாவளி இறுதி வாரத்தையும் பொருட்படுத்தாது வல்லினத்தின் படைப்பாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வாசகர்கள் இலக்கியவாதிகள் என அரங்கம் நிறைந்திருந்தது. சுமார் 300 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அவர்களின் 30 பேர் மை ஸ்கில் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியிடப்பட்ட புத்தகங்களுக்குப் புத்தக விமர்சனம் செய்ய தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் இமையம், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் வ.கீதா, மொழிபெயர்ப்பாளர்   ஸ்ரீதர் ரங்கராஜன் ஆகியோர் வந்திருந்தார்கள். ஓவியக்கண்காட்சியைத் திறந்து வைக்க ஓவியர் மருது சிறப்பு வருகை புரிந்தார்.

கவிஞர் பூங்குழலி வீரன் இம்முறை கலை இலக்கிய வீழாவில் அறிவிப்பு பணியை மேற்கொண்டார்.

ம.நவீன் எழுதிய மண்டை ஓடி சிறுகதை தொகுப்பு குறித்து எழுத்தாளர் இமையம் பேசினார். ம.நவீனின் சிறுகதைகளில் காட்டப்படும் மனிதர்கள் குறித்தும் அவர்களின் வாழ்வியல் குறித்தும் விரிவாக தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். விரிவாக வாசிக்க

விஜயலெட்சுமி எழுதிய ‘துணையெழுத்து’ புத்தகம் குறித்து எழுத்தாளர் வ.கீதா பேசுகையில் மலேசிய தமிழ்ச்சூழலில் இப்புத்தம் மிக முக்கியமானது என கோடிட்டார். விரிவாக வாசிக்க

தயாஜி எழுதிய ஒளி புகா இடங்களின் ஒலி புத்தகம் குறித்து மொழிப்பெயர்ப்பாளர் ஸ்ரீதர் ரங்கராஜன் பேசும் போது, பத்தி எழுத்துகளின் வகைகளையும் தயாஜியின் புத்தகத்தில் இருக்கும் பாசாங்கற்ற மொழியையும் சுட்டிக்காட்டி பேசினார். (இணைப்பு)

அ.பாண்டியன் எழுதிய அவர்கள் பேனாவின் இருந்து கொஞ்சம் மை புத்தகம் மலாய் இலக்கிய உலகம் குறித்த பார்வைடை கொடுப்பதாக பேசினார். (இணைப்பு)

ம.நவீன், அ.பாண்டியன், விஜயலெட்சுமி ஆகியோரின் புத்தகத்தை மருத்துவர் சண்முகசிவா வெளியீடு செய்தார். தயாஜியின் புத்தகத்தை அவரது பெற்றோர் வெளியீடு செய்தார்கள். புத்தகங்களை விமர்சனம் செய்தவர்கள் முறையே புத்தகங்களை பெற்றுக்கொண்டார்கள்.

எழுத்தாளர்கள் தத்தம் நூல்களை குறித்து பேசியது வந்திருப்பவர்களை கவர்ந்தது.

எழுத்தாளர் நவீன் தன் உரையில், தான் சிறுகதை தொகுப்பை வெளியிடுவதன் மூலம் மனநிறைவை உணர்வதாகக் கூறினார். அவரின் சிறுகதைகளை செறிவாக்கம் செய்த எழுத்தாளர் இமையம் தொகுப்பில் இருந்து சில சிறுகதைகளை நிராகரிக்கும் போது தனது தொகுப்பு தரமான ஒன்றாக வருவதை தான் உறுதி செய்ததாகக் கூறினார். பொதுவாக எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு மற்றவரால் செறிவாக்கம்செய்யப்படும்போது ஏற்றுக்கொள்வதில்லை என மேலும் பேசியவர் எழுத்தாளர் இமையம் செறிவாக்கம் செய்த பின் தனது சிறுகதைகள் மேலும் தரமாக வந்திருக்கிறது என்றார்.

தொடர்ந்து எழுத்தாளர் அ.பாண்டியன் தனது நூல் குறித்து உரையாற்றினார். இவர் ஓர் இடைநிலைப்பள்ளிஆசிரியர்.நீண்டகாலமாக இலக்கிய ஆர்வலராக இயங்கிவருகிறார். இவரது சிறுகதைகள் மலேசிய இலக்கிய சூழலில் நன்கு அறிமுகமானவை. இவர் மலேசிய தமிழ்ப்பரப்பில் மலாய் இலக்கியத்தை அறிமுகம் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறார். ’அவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ என்னும் நூல் அ.பாண்டியனின் முதல் நூல். எப்படி ஒரு படைப்பு மலேசிய சூழலில் தேசிய படைப்பாக பார்க்கப்படுகின்றது என்று அவர் பேசினார். மலாய் படைப்புகளில் இருக்கும் பலம் பலவீனம் குறித்து அவர் பேசியது அவருக்கு மலாய் இலக்கியத்தில் இருக்கும் ஈடுபாட்டை காட்டியது.

அடுத்ததாய் இளம் எழுத்தாளரான விஜயலெட்சுமி பேசினார். இவர் புனைவுகள் அல்லாத எழுத்துவகைகளில் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார். மலாயா பல்கலைக்கழக நூலகத்தில் நூலகவியலாளராகப் பணியாற்றும் இவர், அத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். இவர் யாழ் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார். ‘துணைக்கால்’ இவருக்கு முதல் நூல். எழுத்தாளர் விஜயலெட்சுமி பேசுகையில் மலேசியாவில் எழுத்தாளர்களுக்குக் உரிமம், isbn போன்றவற்றின் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதனை சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து எழுத்தாளர் தயாஜி உரையாற்றினார். சிறுகதை,கவிதை,பத்திகள் எழுதிவரும் இவர் மலேசியாவில் இளம் எழுத்தாளர்களில் முனைப்பாக செயல்படுகின்றவர். முன்னால் வானொலி அறிவிப்பாளரான இவர் தற்போது யாழ் பதிப்பகத்தில் தலைமை விநியோகிப்பாளராக இருக்கிறார். அதோடு புத்தகச்சிறகுகள் என்ற இணைய புத்தக்கடையும் நடத்தி வருகின்றார். ‘ஒளி புகா இடங்களின் ஒலி’ என்பது இவரின் முதல் நூல். வெளிச்சத்திற்கு பின்னால் இருக்கும் இருள் சூழ்ந்த இடங்கள் குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் இல்லாத சமூகத்தில் ஒழுக்கம் அன்பு போன்ற போலி வார்த்தைகளை நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

geeta

வானொலியில் இருக்கும் போது இதர பொழுதும் தான் சந்தித்த விளிம்புநிலை மனிதர்களை குறித்த தான் எழுதியிருக்கும் பத்திகள் அடங்கிய இந்த தொகுப்பு படிக்கின்றவர்களுக்கு சக மனிதன் மீதான அக்கறை ஏற்படும் என தான் நம்புவதாக கூறினார்.

கலை இலக்கிய விழாவின் இரண்டாவது அங்கமாக ஓவிய கண்காட்சியை ஓவியர் மருது திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஓவியர் சந்துருவின் ஓவியங்களை வெகுவாகப்பாராட்டிய அவர் குறிப்பிட்ட சில ஓவியங்கள் குறித்தும் தனது அபிப்பிராயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

வல்லினத்தின் 7-வது கலை இலக்கிய விழா மாலை 6 மணிக்கு முடிவுற்றது. நண்பர்கள் பலர் நூல்களை வாங்குவதிலும் ஓவிய கண்காட்சியில் தங்களை கவர்ந்த ஓவியங்களை புகைப்படம் எடுப்பதில் பரபரப்பாக காணப்பட்டனர். மகிழ்ச்சியான நிறைவு.

kankadci
kuudamsandru

——————–

வல்லினம் கலை இலக்கிய விழா 7

வல்லினம் ஒவ்வொரு வருடமும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் நடைப்பெறுகிறது.

திகதி: 1.11.2015 (ஞாயிறு)

நேரம்:  1.00pm

இடம்: Asian Art Museum, Universiti of Malaya, Kuala Lumpur

இந்நிகழ்வில் நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றின் விபரம் பின்வருமாறு:

மண்டை ஓடி (சிறுகதை தொகுப்பு) – ம.நவீன்

அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை (கட்டுரை தொகுப்பு) – அ.பாண்டியன்

துணைக்கால் (கட்டுரை தொகுப்பு) – விஜயலட்சுமி

ஒளி புகா இடங்களின் ஒலி (பத்திகள்) – தயாஜி

இந்நிகழ்வுக்கென தமிழகத்திலிருந்து பல முக்கியமான ஆளுமைகள் வருகின்றனர்.

1. ஆதவன் தீட்சண்யா – (புதுவிசை இதழின் ஆசிரியர். எழுத்தாளர், கவிஞர்)

இவரது அகப்பக்கம்: http://aadhavanvisai.blogspot.com/

2. எழுத்தாளர் இமையம் – (கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங் கதெ – போன்ற பல முக்கிய நாவல்களை எழுதியவர்.)

இவரது அகப்பக்கம்: http://imayamannamalai.blogspot.com/

3. வ.கீதா – (எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.)

4. ஓவியர் டிராட்ஸ்கி மருது (தமிழகத்தின் மிகச்சிறந்த ஓவியர்)

மேலும் நிகழ்வை சிறப்பிக்க இம்முறை ‘தோட்டமும் வாழ்வும்’ என்ற கருப்பொருளில் மலேசிய ஓவியர் சந்துருவின் ஓவியக்கண்காட்சி இடம்பெறுகிறது.

அனைத்து விபரங்களுக்கும்: ம.நவீன் 0163194522 அல்லது தயாஜி 0149005447

(இந்நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு முக்கியம்)

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXVallinam-Header1

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s